அமெரிக்க அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட வரைவு அறிக்கை குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. வரைவு அறிக்கை மொத்தம் 41 நாடுகளை மூன்று குழுக்களாகப் பிரிக்கிறது. முதல் குழுவில் ஆப்கானிஸ்தான், ஈரான், சிரியா, கியூபா மற்றும் வடகொரியா உள்ளிட்ட 10 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த நாடுகளின் குடிமக்களுக்கான விசாக்களை முற்றிலுமாக நிறுத்தி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்டாவது குழுவில் எரித்திரியா, ஹைதி, லாவோஸ், மியான்மர் மற்றும் தெற்கு சூடான் ஆகிய 5 நாடுகள் உள்ளன. இந்த நாடுகளின் குடிமக்களுக்கான விசாக்கள் ஓரளவு இடைநிறுத்தப்படும். இது சுற்றுலா, மாணவர் மற்றும் பிற குடியேற்ற விசாக்களை வழங்குவதை பாதிக்கும். மூன்றாவது குழுவில் பாகிஸ்தான், பூடான், மியான்மர் உள்ளிட்ட 26 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த நாடுகளின் அரசாங்கங்கள் 60 நாட்களுக்குள் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முயற்சிக்கவில்லை என்றால், அமெரிக்க விசா வழங்குவதை நிறுத்தி வைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.

இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த பட்டியல் மாறலாம். வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ உள்ளிட்ட நிர்வாகம், இந்த பட்டியலுக்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் 47-வது அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். அமெரிக்க அதிபராக டிரம்ப் முதன்முறையாக பதவியேற்றதும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் 7 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு பயணத் தடை விதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.