வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டு பொருட்களுக்கு வரியை உயர்த்துவதாக அறிவித்ததையடுத்து, அமெரிக்க பங்குச்சந்தை வெள்ளிக்கிழமை கடும் சரிவை சந்தித்தது. இது குறித்த கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், “சில நேரங்களில் எதையாவது சரிசெய்ய மருந்து அவசியம்” என்று தனது வரி நடவடிக்கையை நியாயப்படுத்தினார்.
ஞாயிற்றுக்கிழமை புளோரிடாவில் கோல்ப் விளையாடிவிட்டு வாஷிங்டன் திரும்பிய டிரம்ப், விமானத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- உலக நாடுகளால் எங்களை மிகவும் மோசமாக நடத்தியுள்ளனர். முட்டாள் தலைமை கடந்த காலத்தில் அனுமதித்துள்ளது. ஆனால் நாங்கள் அதை சரிசெய்கிறோம். சில சமயங்களில் சிலவற்றை சரிசெய்ய மருந்து தேவைப்படுகிறது. அப்படித்தான் இந்த வரி. இது ஒரு அழகான படி. பங்குச் சந்தையில் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது.

ஆனால் அமெரிக்கா அனைத்து சவால்களையும் சமாளிக்க மிகவும் வலிமையான நாடு. நாம் பரஸ்பர வரி விதித்துள்ள நிலையில், உலகில் உள்ள பல நாடுகள் நம்முடன் ஏதாவது ஒப்பந்தம் செய்து கொண்டு சுமையை குறைக்க முடியுமா என்று திணறி வருகின்றன. ஆனால் இந்த வரியை திரும்பப் பெறுவது என்ற கேள்விக்கே இடமில்லை. இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.
டிரம்பின் வரி விதிப்பால் பணவீக்கம் அதிகரித்து பொருளாதார மந்தநிலை ஏற்படும் என அமெரிக்க முதலீட்டாளர்கள் அச்சம் தெரிவித்துள்ள நிலையில், டிரம்பின் பொருளாதார ஆலோசனைக் குழு அதிகாரிகள் அவ்வாறான அச்சம் தேவையில்லை என தெரிவித்துள்ளனர். ஆனால் வெள்ளிக்கிழமை மட்டும் அமெரிக்க பங்குச் சந்தை 6 லட்சம் கோடி டாலர்கள் வரை சரிந்தது குறிப்பிடத்தக்கது.