நியூயார்க் நகரில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார். உலக அமைதிக்காக அவர் எடுத்த முயற்சிகள் நோபல் பரிசுக்குரியவை என்று வலியுறுத்தி வருகிறார். குறிப்பாக பல போர்களை நிறுத்தியதன் மூலம் உலக அமைதிக்கு தன்னால் பெரும் பங்களிப்பு செய்துள்ளேன் என அவர் தெரிவித்தார்.

ரஷ்யா-உக்ரைன் போர், இஸ்ரேல்-காசா மோதல் உள்ளிட்ட பல பிரச்சினைகளில் தாம் தீர்வுகளை உருவாக்கியதாகவும், அதனால் தான் நோபல் அமைதி பரிசு பெற வேண்டும் என்றும் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதுவரை 11 போர்களை நிறுத்தியதாக கூறும் அவர், அந்த சாதனைகள் புறக்கணிக்கப்பட்டால் அது அமெரிக்காவுக்கு மிகப் பெரிய அவமானமாகும் எனவும் வலியுறுத்தினார்.
இந்த கோரிக்கை நோபல் கமிட்டியால் ஏற்கப்படுமா என்பது தெளிவில்லை. இருப்பினும் பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகள் டிரம்பின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளும் சமீபத்திய அமைதி திட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் கூறினார்.
டிரம்ப் தனது பேச்சில், “நாங்கள் போரை நிறுத்திவிட்டோம், இஸ்ரேலும் ஒப்புக்கொண்டது, இது ஒரு அற்புதமான நிகழ்வு” என பெருமையாக குறிப்பிட்டார். உலக அரசியல் வட்டாரங்களில் அவரது இந்தக் கருத்துகள் மீண்டும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.