அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் உள்ள போர்ட்லாண்டு நகரில் வன்முறை நிகழ்வுகள் நடப்பதாகக் கூறி, மத்திய படைகளை அனுப்பும் டிரம்ப் நிர்வாகத்தின் முடிவு சர்ச்சை எழுப்பியது. இதற்கு எதிராக மாகாண கவர்னரும், நகர மேயரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி கரேன் இமர்ஜூட், போர்ட்லாண்டில் மத்திய படைகள் தேவைப்படும் அளவுக்கு வன்முறை இல்லை எனவும், டிரம்ப் நிர்வாகத்தின் முடிவு உண்மைக்கு புறம்பானது எனவும் கூறி, படைகள் அனுப்புவதற்கான உத்தரவுக்கு தற்காலிக தடை விதித்தார்.
இந்த தீர்ப்பு அடுத்த கட்ட விசாரணை தொடங்கும் வரையிலும், அதாவது வரவிருக்கும் 18ம் தேதி வரை அமலில் இருக்கும். இதேநேரம், நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அமெரிக்க அரசியலில் மத்திய மற்றும் மாகாண ஆட்சிகள் இடையேயான அதிகார எல்லைகள் மீதான விவாதத்தை மீண்டும் கிளப்பிய இந்த வழக்கு, டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான உள்நாட்டு பாதுகாப்பு கொள்கைகள் மீதான விமர்சனங்களையும் அதிகரித்துள்ளது.