கலிபோர்னியா கடற்கரையில் உள்ள ஒரு தீவில் அல்காட்ராஸ் சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று இந்த பழைய சிறைச்சாலையான அல்காட்ராஸை மீண்டும் திறக்கவும் விரிவுபடுத்தவும் உத்தரவிட்டுள்ளதாக அறிவித்தார். தனது சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு பதிவில், “அமெரிக்கா நீண்ட காலமாக கொடிய மற்றும் வன்முறை குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டுள்ளது.

இப்போது அல்காட்ராஸ் சிறைச்சாலையை புனரமைத்து மீண்டும் திறக்க உத்தரவிட்டுள்ளேன். அல்காட்ராஸ் சிறைச்சாலை திறப்பது சட்டம், ஒழுங்கு மற்றும் நீதியின் அடையாளமாக இருக்கும். சிறைச்சாலையைத் திறக்க சிறைச்சாலைத் துறை, நீதித்துறை, எஃப்.பி.ஐ மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த சிறைச்சாலை அமெரிக்காவின் மிகவும் இரக்கமற்ற மற்றும் வன்முறை குற்றவாளிகளை சிறையில் அடைக்கும்.”
அல்காட்ராஸ் சிறைச்சாலை அமெரிக்காவின் மிக மோசமான சிறைச்சாலைகளில் ஒன்றாகும். இந்த சிறைச்சாலை 1912 முதல் செயல்பட்டு 1963-ல் மூடப்பட்டது. இதைத் தொடர்ந்து, அல்காட்ராஸ் சிறைச்சாலை அமைந்துள்ள சிறிய தீவு தற்போது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக உள்ளது. இது சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கோல்டன் கேட் பாலம் அருகே அமைந்துள்ளது. இந்த தீவில் பல்வேறு ஹாலிவுட் திரைப்படங்கள் படமாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.