அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில், பார்லிமென்டின் வெளியே நேஷனல் மால் பகுதியில், அதிபர் டொனால்ட் டிரம்பின் 12 அடி உயர தங்க நிற சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்தச் சிலையில், டிரம்ப் தனது கையில் ‘பிட்காயின்’ என்ற கிரிப்டோ நாணயத்தை ஏந்தியபடி காட்சியளிக்கிறார். இதனால் அங்கு வந்த மக்களின் கவனம் ஈர்க்கப்பட்டதோடு, பல்வேறு அரசியல் மற்றும் பொருளாதார விவாதங்களையும் தூண்டியுள்ளது.

பெடரல் வங்கி சமீபத்தில் வட்டி விகிதத்தை குறைக்கும் அறிவிப்பை வெளியிட்டிருந்த நிலையில், அதே நேரத்தில் இந்தச் சிலையும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சிலைக்கான நிதி, கிரிப்டோ முதலீட்டாளர்களிடமிருந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சிலை, டிரம்ப் கிரிப்டோ நாணயங்களுக்கு அளித்த வெளிப்படையான ஆதரவுக்கான நன்றியாக நிறுவப்பட்டதாகவும், டிஜிட்டல் நாணயத்தின் எதிர்காலம் மற்றும் அமெரிக்காவின் பணவியல் கொள்கையில் அரசின் பங்கு குறித்து விவாதங்களை எழுப்பும் நோக்கத்துடனும் அமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
வாஷிங்டனில் திறக்கப்பட்டுள்ள இந்தச் சிலை, டிரம்பின் அரசியல் செல்வாக்கை மட்டுமல்லாமல், கிரிப்டோ கரன்சியின் வளர்ச்சிக்கும் ஒரு அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் இதன் அரசியல் தாக்கம் என்னவாக இருக்கும் என்பதில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.