வாஷிங்டன்: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போரை நிறுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் இடையிலான பேச்சுவார்த்தையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கும் அழைப்பு விடுப்பது குறித்து வெள்ளை மாளிகை பரிசீலித்து வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் ஆர்வம் காட்டி, ரஷ்யாவுக்கு பொருளாதார தடைகள் விதிக்க எச்சரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, டிரம்ப்பின் சிறப்பு தூதர் புடினை சந்தித்து பேச்சு நடத்தினார். அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் ஆகஸ்ட் 15ம் தேதி டிரம்ப் – புடின் சந்திப்பு நடைபெற உள்ளது. இந்த சந்திப்பின் முக்கிய அம்சமாக போர்நிறுத்தம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் தரப்பில் முத்தரப்பு பேச்சு நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டாலும், ரஷ்யா இதனை ஏற்கவில்லை. ஆனால், உக்ரைன் இல்லாமல் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த சூழலில், ஜெலன்ஸ்கிக்கும் அழைப்பு விடுப்பது குறித்து வெள்ளை மாளிகை தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. எனினும், அவர் இந்த அழைப்பை ஏற்று பங்கேற்பாரா என்பது குறித்து தெளிவு இல்லை. உக்ரைன் தரப்பில், நேரடியாக பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தால், அது போர் முடிவுக்கு வழிவகுக்கும் என நம்பப்படுகிறது. உலக நாடுகள், இந்த சந்திப்பை அமைதிக்கான முக்கிய திருப்பமாக கருதுகின்றன.