கோபன்ஹேகன்: டென்மார்க்கில் நடைபெற்ற முக்கிய அரசியல் கூட்டத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பிழை உலக தலைவர்களிடையே நகைச்சுவையாக மாறியது.
சமீபத்தில், அர்மீனியா – அசர்பைஜான் இடையேயான போரை நிறுத்த டிரம்ப் நடத்திய மத்தியஸ்தம் மூலம் சமாதான ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப், அர்மீனியாவுக்கு பதிலாக அல்பேனியா என்றும், அசர்பைஜானை அபர் பைஜான் என்றும் தவறாக கூறினார். இதுவே சர்வதேச அளவில் விமர்சனத்தையும், நகைச்சுவையையும் தூண்டியது.

மேலும், “இந்தியா – பாகிஸ்தான் உள்பட ஏழு நாடுகளின் போரை நிறுத்தியதற்காக எனக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும்; இல்லையெனில் அது அமெரிக்காவை அவமதிப்பதாகும்” என்று பெருமையாகக் கூறியிருந்தார். இந்தக் கருத்தும் விவாதத்துக்குரியதாக இருந்தது.
இந்த நிலையில், டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடந்த ஐரோப்பிய கூட்டத்தில், அல்பேனிய பிரதமர் எடி ரமா, “அல்பேனியா – அசர்பைஜான் போர் நிறுத்தத்துக்கு வாழ்த்து தெரிவிக்காததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கிண்டலாகச் சொன்னார். இதைக் கேட்ட பிரான்ஸ் அதிபர் மேக்ரான் சிரித்தபடி, “மன்னித்து விடுங்கள்” என்று பதிலளித்தார். உடனே கூட்டத்தில் இருந்த தலைவர்கள் அனைவரும் கலகலவென சிரித்தனர்.
இவ்வாறு, அர்மீனியா – அசர்பைஜான் ஒப்பந்தத்தில் டிரம்ப்பின் பெயர் பிழை, சர்வதேச மேடையில் அமெரிக்காவையே நகைச்சுவைக்குரிய நிலையில் நிறுத்தியிருக்கிறது.