வாஷிங்டன்: பணயக்கைதிகள் விவகாரத்தில் ஹமாஸ் அமைப்பினருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடைசி எச்சரிக்கையை விடுத்துள்ளார். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இயங்கி வரும் ஹமாஸ் இயக்கத்தினருக்கிடையே இரண்டு ஆண்டுகளாக நீடித்து வரும் மோதல் பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை சுமார் 65,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையை சமாதானப்படுத்த முயற்சி செய்து வரும் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பல முறை ஆலோசனை நடத்தியுள்ளார். தற்போது ஹமாஸ் 48 பணயக்கைதிகளை சிறைபிடித்திருப்பதால், அவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தனது ட்ரூத் சோஷியல் பதிவில் கடுமையான எச்சரிக்கையை பதிவு செய்துள்ளார்.
அந்த பதிவில், “பணயக்கைதிகள் அனைவரும் வீடு திரும்ப வேண்டும் என்பதே உலக மக்களின் எதிர்பார்ப்பு. போர் நிறைவடைய வேண்டும். இஸ்ரேல் ஏற்கனவே நான் கூறிய நிபந்தனைகளை ஏற்றுள்ளது. ஹமாஸும் அதை ஏற்க வேண்டிய நேரம் இது. இது கடைசி எச்சரிக்கை. இனி வேறு எச்சரிக்கை இருக்காது” என்று டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார்.
டிரம்பின் எச்சரிக்கை வெளியாகியவுடன், ஹமாஸும் பதிலளித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், இது போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முக்கிய அறிவிப்பாக கருதப்படுவதாகவும், அனைத்து கைதிகளையும் விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது. இந்த முன்னேற்றம் மோதலை சமாதானப்படுத்தும் வழியைத் திறக்குமா என்பது உலகம் முழுவதும் கவனிக்கப்படுகிறது.