ஓஸ்லோ: உலக அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் ஆசை நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. “நான் எட்டு போர்களை நிறுத்திய ஒரே அதிபர்” என்று பெருமிதம் கூறி வரும் டிரம்ப், தமக்கே இந்த பெருமை கிடைக்க வேண்டும் என வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.

உலகின் முக்கியமான விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு, இலக்கியம், மருத்துவம், அமைதி போன்ற துறைகளில் சிறப்பாக பங்களித்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. இன்று அறிவிக்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசை எதிர்நோக்கும் போது, டிரம்பின் பெயர் மீண்டும் சர்ச்சையின் மையமாகியுள்ளது.
ஏற்கனவே தியோடர் ரூஸ்வெல்ட், உட்ரோ வில்சன், ஜிம்மி கார்ட்டர், அல் கோர் மற்றும் பராக் ஒபாமா உள்ளிட்ட அமெரிக்க தலைவர்கள் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுள்ளனர். இந்த வரிசையில் டிரம்பும் இணைவாரா என்ற கேள்வி உலக அரசியல் வட்டாரங்களிலும், சமூக வலைதளங்களிலும் தீவிரமாக பேசப்படுகிறது.
“அமைதிக்கான நோபல் பரிசு டிரம்புக்கு வழங்கப்பட்டால் அது பரிசின் மரியாதையைக் குறைக்கும்” என்ற எதிர்மறை கருத்துகளும் எழுந்துள்ளன. அதே நேரத்தில், சில நாடுகள் டிரம்பின் “அமைதி முயற்சிகள்” குறித்து ஆதரவாகவும் கருத்து தெரிவிக்கின்றன. இன்றைய அறிவிப்பு, உலக அரசியலில் புதிய விவாதத்தை கிளப்புவது உறுதி.