வாஷிங்டன்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மாநாட்டில் பங்கேற்க சீனா சென்றுள்ள பிரதமர் மோடி, ஞாயிற்றுக்கிழமை தியான்ஜினில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். பிரதமர் மோடி திங்களன்று ரஷ்ய அதிபர் புதினையும் சந்தித்தார். இந்த சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடகக் கணக்கில் இந்தியாவின் வரி விதிப்பு குறித்து பதிவிட்டுள்ளார்.
“இந்தியா இப்போது இறக்குமதி வரிகளை பூஜ்ஜியமாகக் குறைக்க முடிவு செய்துள்ளது. ஆனால் இது மிகவும் தாமதமானது. இதை அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்க வேண்டும். இதுவரை, இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு உறவு ஒருதலைப்பட்சமாகவே இருந்து வருகிறது. இது பல தசாப்தங்களாகத் தொடர்கிறது. மற்ற நாடுகளை விட இந்தியா அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரிகளை விதித்துள்ளது. இதனால் அமெரிக்கப் பொருட்கள் இந்தியாவில் விற்கப்படுவது சாத்தியமில்லை.

இதன் தாக்கம் ஒருதலைப்பட்சமாகவே உள்ளது. மேலும், இந்தியா ரஷ்யாவிடமிருந்து அதிகமாக எண்ணெய் மற்றும் ஆயுதங்களை வாங்குகிறது, அமெரிக்காவிடமிருந்து குறைவாகவே வாங்குகிறது, ”என்று டிரம்ப் பதிவில் கூறியிருந்தார். பரஸ்பர வரிவிதிப்பு: அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரிகளை விதிக்கும் நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா பரஸ்பர வரிவிதிப்பு கொள்கையை ஏற்றுக்கொள்ளும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். கனடா, மெக்சிகோ உட்பட உலகின் பல்வேறு நாடுகள் மீது அவர் அதிக இறக்குமதி வரிகளை விதித்துள்ளார்.
இந்த முடிவை எதிர்த்ததன் விளைவாக, டிரம்ப் சீனா மீதான வரியை பல முறை அதிகரித்தார். பின்னர், அவர் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரி விகிதத்தைக் குறைத்தார். இதேபோல், இந்திய பொருட்களுக்கு ஏற்கனவே 25 சதவீத வரி விதித்த டிரம்ப், ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி, இந்தியாவின் மீதான வரியை 50 சதவீதமாக உயர்த்தி, கூடுதலாக 25 சதவீத வரியை இந்தியா மீது விதித்தார்.
இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. டிரம்பின் வரி நடவடிக்கையால், இந்தியாவில் உள்ள தொழில்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. தமிழ்நாட்டிலும், ஜவுளி, ஆடைகள், இயந்திரங்கள், ஆட்டோமொபைல்கள், நகைகள், ரத்தினக் கற்கள், தோல் காலணிகள், கடல் பொருட்கள் மற்றும் ரசாயனங்கள் உள்ளிட்ட துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. திருப்பூரின் ஏற்றுமதி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.