வாஷிங்டன்: 3 ஆண்டுகளாக நீடித்து வரும் உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், இது குறித்து சமீபத்தில் ரஷ்ய அதிபர் புதினிடம் பேசினார். இது தொடர்பாக ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்துக்கு டிரம்ப் பேட்டி அளித்தார். அந்த பேட்டியின் மூலம், டிரம்ப் உக்ரைனை ஓரங்கட்டுவது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய பைடன் அரசாங்கம் உக்ரைனுக்கு ஆயுத உதவி மற்றும் நிதி உதவிகளை வழங்கியது. இந்நிலையில் டிரம்ப் ஆட்சிக்கு வந்ததும் இந்த நிலையில் 360 டிகிரி மாற்றம் ஏற்பட்டது.
இது ஜெலென்ஸ்கி மற்றும் நேட்டோ உறுப்பு நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. முன்பு போல் இனி அமெரிக்க ஆதரவை எதிர்பார்க்க முடியாது என்பதை ஒருமுறையோ, இருமுறையோ அல்ல, தொடர்ச்சியாக பலமுறை ஜெலென்ஸ்கியிடம் ட்ரம்ப் தெளிவுபடுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஃபாக்ஸ் நியூஸுக்கு டிரம்ப் அளித்த பேட்டியும் கவனம் பெற்று வருகிறது. அந்த பேட்டியில் டிரம்ப் கூறியதாவது:-
ரஷ்ய அதிபர் புதினுடனான பேச்சு வார்த்தை சிறப்பாக நடந்தது. ஆனால், உக்ரைன் அதிபருடன் அவர் பேசவில்லை. உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வரும் பேச்சுவார்த்தையில் ஜெலென்ஸ்கியுடன் பேச வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன். அவர் மூன்று ஆண்டுகளாக ஜனாதிபதியாக உள்ளார். இருப்பினும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஜெலென்ஸ்கி கடினத்தன்மையைக் காட்டி வருகிறார். எனவே, நான் நடத்தும் பேச்சுவார்த்தையில் ஜெலென்ஸ்கியோ அல்லது மற்ற உக்ரேனிய அதிகாரிகளோ ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் போரை முடிவுக்கு கொண்டுவர புதினும் ஜெலென்ஸ்கியும் நேரடியாக சந்திக்க வேண்டும்.
ஜெலென்ஸ்கியின் பிடிவாதத்தைத் தொடர நான் அனுமதிக்க மாட்டேன். “உக்ரைன் எல்லா வகையிலும் துணிச்சலான நாடு என்பதையும் நான் பதிவு செய்ய விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார். தேர்தல் பணியில் எதேச்சதிகாரப் போக்குடன் செயல்படுவதாக ஜெலென்ஸ்கியை டிரம்ப் ஏற்கனவே விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஜெலென்ஸ்கிக்கு எதிராக சரமாரி விமர்சனங்கள் வந்தாலும், அந்நாட்டின் கனிமங்களை பயன்படுத்துவது தொடர்பான ஒப்பந்தம் விரைவில் அமெரிக்கா மற்றும் உக்ரைன் இடையே கையெழுத்தாகும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இருந்து வெகு தொலைவில் உள்ள நாட்டில் ஏன் இவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பிய டிரம்ப், அந்நாட்டில் உள்ள அரிய கனிமங்களை இழப்பீடாக பயன்படுத்த ஒப்பந்தம் போடுவதாக தெரிவித்தார். கனிமங்களைப் பயன்படுத்த அனுமதித்ததற்கு ஈடாக அமெரிக்கா மீண்டும் இராணுவ உதவியை நீட்டிக்கும் என்று ஜெலென்ஸ்கி எதிர்பார்க்கிறார். இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஜெலென்ஸ்கி தயக்கம் காட்டி வரும் சூழலில், ஒப்பந்தம் கண்டிப்பாக கையெழுத்தாகும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். இதில் நீதி நிலைநாட்டப்படும் என ஜெலென்ஸ்கி நம்பிக்கை தெரிவித்தார்.