வாஷிங்டன்: மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 25% வரியை ஏப்ரல் 2-ம் தேதிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒத்திவைத்துள்ளார். இதையடுத்து கனடாவும் அமெரிக்கா மீதான வரி விதிக்கும் முடிவை ஒத்திவைத்துள்ளது. பங்குச் சந்தைகளின் வீழ்ச்சி, பொருளாதார நிபுணர்களின் எச்சரிக்கைகள் மற்றும் முன்னணி அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனங்களின் தலையீடு ஆகியவை இதற்குக் காரணமாகத் தெரிகிறது.
அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப், 2-வது முறையாக அதிபராக கடந்த ஜனவரி 20-ம் தேதி பதவியேற்றார். அவர் பதவியேற்ற பின், பரஸ்பர வரியை அறிவித்தார். சமீபத்தில், அமெரிக்க காங்கிரஸின் கூட்டு அமர்வில் தனது முதல் உரையின் போது, பரஸ்பர கட்டணங்கள் குறித்த தனது நிலைப்பாட்டை டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினார். அவர் கூறுகையில், “அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா 100 சதவீத வரி விதிக்கிறது.

மற்ற நாடுகளும் அதிக கட்டணங்களை விதிக்கின்றன. இது நியாயமற்றது. இந்தியா ஆட்டோமொபைல் தயாரிப்புகளுக்கு 100 சதவீதத்திற்கும் அதிகமான வரியை விதிக்கிறது. ஐரோப்பிய யூனியன், இந்தியா, சீனா, பிரேசில், மெக்சிகோ, கனடா போன்ற நாடுகள் அனைத்தும் நாம் விதிக்கும் கட்டணத்தை விட அதிக வரிகளை விதிக்கின்றன. அதைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதனால், மற்ற நாடுகள் விதிக்கும் அதே அளவு வரியை அமெரிக்காவும் விதிக்கும்.
மற்ற நாடுகள் பல ஆண்டுகளாக அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதித்து வருகின்றன. இப்போது நாம் நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுக்கு இடையே வர்த்தகக் கொள்கைகளில் ஏற்றத்தாழ்வு உள்ளது. அதைச் சரிசெய்வதற்கான ஒரே வழி பரஸ்பர கட்டணங்களைச் செயல்படுத்துவதுதான் என்று நான் நினைக்கிறேன்.
முன்னதாக, மெக்சிகோ மற்றும் கனடா மீது 25% இறக்குமதி வரிகளை விதிக்கும் கோப்புகளில் அமெரிக்க ஜனாதிபதி கையெழுத்திட்டார். இது உலக அளவில் பங்குச் சந்தைகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. டிரம்பின் முடிவு குறிப்பாக அமெரிக்க வளர்ச்சியை பாதிக்கும் என்றும் பணவீக்கத்தில் கூர்மையான அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்றும் அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் எச்சரித்தனர்.
இந்நிலையில், வரி விதிப்பை ஒரு மாதத்திற்கு டிரம்ப் ஒத்திவைத்துள்ளார். இந்நிலையில், “கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பு அமெரிக்கா-மெக்சிகோ-கனடா ஒப்பந்தத்தின் கீழ் விதிக்கப்படாது. எனினும், இது ஒரு மாத காலத்திற்கு மட்டுமே அமலில் இருக்கும்.” இவ்வாறு அமெரிக்கா அறிவித்துள்ளது.