வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் ஜப்பான் இடையிலான புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ஜப்பான் பொருட்களுக்கு 15 சதவீத அடிப்படை வரி விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறையை குறைக்கும் நோக்கில், டிரம்ப் அரசு பல நாடுகளுக்கு கூடுதல் வரிகள் விதித்து வருகிறது. அந்த வரிசையில் ஜப்பான் பொருட்களுக்கும் 15 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. ஆனால், இப்போது கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஆட்டோமொபைல், உதிரி பாகங்கள், விண்வெளி தயாரிப்புகள், மருந்துகள் போன்ற துறைகளில் ஜப்பான் நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட உள்ளன.

வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “இந்த ஒப்பந்தம் தேசிய நலன்களை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டது. இதன் படி ஜப்பான், அமெரிக்காவில் 550 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடு செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. இது வரலாற்றில் மிகப்பெரிய ஒப்பந்தங்களில் ஒன்றாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“இது அமெரிக்கா–ஜப்பான் உறவின் புதிய அத்தியாயம்” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால், சில விமர்சகர்கள், “மிரட்டல், அழுத்தம், வற்புறுத்தல் மூலம் கையெழுத்தான ஒப்பந்தங்கள் நீண்ட நாள் நிலைக்காது” என்று கடுமையாக விமர்சித்துள்ளனர்.