ஜூலை 30ஆம் தேதி காலை, ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், பசிபிக் பெருங்கடல் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 8.7 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் பதிவானதால், ரஷ்யா மற்றும் ஜப்பானின் கடற்கரை பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்கியுள்ளன. இந்த பேரழிவை ஒட்டி பல நாடுகளில் சுனாமி எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

நிலநடுக்கம் கம்சட்கா தீபகற்பத்தில் பூமிக்கு அடியில் சுமார் 19 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டு, அருகிலுள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்களை கடுமையாக குலுக்கியது. பல கட்டடங்களின் கண்ணாடிகள் உடைந்து, மக்கள் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியில் ஓடி வந்தனர். ஜப்பானின் வானிலை ஆய்வு மையம், 3 மீட்டர் உயரம் வரை அலைகள் வரக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. “கடற்கரை பகுதியில் யாரும் செல்ல வேண்டாம்” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவிலும் அலாஸ்கா மற்றும் ஹவாய் பகுதிகளுக்கு சுனாமி கண்காணிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ரஷ்யாவின் அவசரகால மேலாண்மைத் துறை, கம்சட்கா தீபகற்பத்தின் சில பகுதிகளில் 3 முதல் 4 மீட்டர் உயரத்தில் சுனாமி அலைகள் அடித்ததாகத் தெரிவித்துள்ளது. மக்கள் பாதுகாப்பிற்காக நெருக்கமான கடற்கரை பகுதிகளில் இருந்து உடனடியாக விலக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களில், கடலலைகள் கடற்கரையில் நின்ற படகுகளையும் மீட்பு குழுவினரையும் தாக்கும் கோரமான காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த நிகழ்வுகள், பசிபிக் வளைகுடா பகுதிகளில் இயற்கை பேரழிவுகள் மீண்டும் மீண்டும் எச்சரிக்கை கொடுக்கின்றன என்பதற்கான முக்கிய அடையாளமாக அமைந்துள்ளன.