அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் கடந்த இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், அலாஸ்காவின் போபோப் தீவுக்கு அருகிலுள்ள சாண்ட்பாயிண்ட் பகுதியில் ஏற்பட்டது. பூமியின் அடியில் வெறும் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதால் அதிர்வுகள் அதிகமாக உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியிலுள்ள மக்கள் திடீரென வீடுகளை விட்டு வெளியேறினர்.

நிலநடுக்கத்தை அடுத்து அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம், கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டது. இதனால், சாண்ட்பாயிண்ட் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் மிகுந்த பதட்டம் ஏற்பட்டது. மக்கள் கடற்கரை பகுதிகளிலிருந்து விலகி பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்த்தப்பட்டனர். பின்னர் நிலநடுக்கத்திற்குப் பிறகு நிலைமையை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், அதனால் கடலில் பெரிய அலை எழும்பியதற்கான சாத்தியம் இல்லை என உறுதி செய்தனர். இதையடுத்து சுனாமி எச்சரிக்கையும் வாபஸ் பெறப்பட்டது.
நிலநடுக்கம் ஏற்பட்ட நேரத்தில் சில குடியிருப்பாளர்கள் எடுத்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன. அந்த வீடியோக்களில் கட்டடங்கள் குலுங்கும் காட்சிகள், சாளரங்கள் ஒலித்தழியும் நிகழ்வுகள் தெளிவாகப் பதிவாகியுள்ளன. அலாஸ்காவில் ஆண்டுதோறும் 10 முதல் 15 வரை இதுபோன்ற நிலநடுக்கங்கள் பதிவாகின்றன என்றாலும், இவ்வளவு சக்திவாய்ந்ததாக இருப்பது அபூர்வம். மிக்சிகன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் நிலவியல் மையம் இந்த நிலநடுக்கம் கடுமையான சேதத்தை ஏற்படுத்தக்கூடியது எனத் தெரிவித்துள்ளது.
அலாஸ்கா நிலநடுக்கம் மக்கள் மனதில் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால், சுனாமி ஏற்படாமல் இருப்பது நிம்மதியை தருகிறது. இயற்கை சீற்றங்களை முறையாகக் கணித்து, அதற்கேற்ப நடவடிக்கை எடுப்பது உயிர்கள் பாதுகாப்புக்கு முக்கியமானது என்பதை இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது.