உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டிரம்பை வரும் திங்கட்கிழமை வாஷிங்டனில் சந்திக்க இருப்பதாக அறிவித்துள்ளார். ரஷ்யா–உக்ரைன் போர் மூன்றாண்டுகளை கடந்தும் முடிவுக்கு வராத நிலையில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. அண்மையில் அலாஸ்காவில் புடின்–டிரம்ப் இடையிலான பேச்சுவார்த்தை மூன்று மணி நேரம் நடந்தும், எந்த முடிவும் எட்டப்படவில்லை. இருநாடுகளின் அதிபர்களும் புரிதல் ஏற்பட்டது, ஆனால் உடன்பாடு இல்லை என தெரிவித்தனர்.

இந்த சூழலில், ஜெலன்ஸ்கி சமூக வலைதளத்தில், டிரம்ப் அழைப்பின் பேரில் வாஷிங்டன் செல்கிறேன் எனக் கூறினார். ரஷ்யாவுடனான போரை நிறுத்தும் முயற்சிகளில் உக்ரைன் அதிகபட்ச முயற்சியை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், அமெரிக்காவின் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார். டிரம்ப்–புடின் சந்திப்பில் பேசிய முக்கிய அம்சங்களைப் பற்றியும், உக்ரைன் பாதுகாப்பு குறித்து ஏற்பட்ட சாதகமான சிக்னல்களைப் பற்றியும் விவாதிக்க இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், ரஷ்யா, அமெரிக்கா, உக்ரைன் ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து முத்தரப்பு சந்திப்பை நடத்த வேண்டும் என்ற டிரம்பின் யோசனையை உக்ரைன் ஆதரிக்கிறது என்றும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். புடினுடன் பேச்சுவார்த்தையை முடித்த பின், டிரம்ப் நேட்டோ நாடுகளின் தலைவர்களுடனும் தொலைபேசி மூலம் உரையாடி, சர்வதேச அரசியல் நிலவரங்களைப் பகிர்ந்துள்ளார். அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் டிரம்ப்–ஜெலன்ஸ்கி சந்திப்பு உலக அரசியலின் கவனத்தை ஈர்த்துள்ளது.