வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை திங்கட்கிழமை சந்திக்க இருப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

சமீபத்தில் அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டிரம்பும், ரஷ்ய அதிபர் புதினும் சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். எந்த உடன்பாடும் எட்டப்படாவிட்டாலும், உரையாடல் பயனுள்ளதாக இருந்ததாக டிரம்ப் தெரிவித்தார். அலாஸ்காவிலிருந்து திரும்பியதும், ஜெலன்ஸ்கியுடன் அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார்.
இதையடுத்து ஜெலன்ஸ்கி, டிரம்புடன் தனிப்பட்ட முறையில் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். பின்னர் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் அரை மணி நேரம் கலந்துரையாடியதாக சமூக வலைதளத்தில் குறிப்பிட்டார்.
அமைதியை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளுக்கும் உக்ரைன் தயாராக உள்ளதாகவும், அமெரிக்கா, ரஷ்யா, உக்ரைன் ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற டிரம்பின் ஆலோசனையை ஆதரிக்கிறோம் என்றும் ஜெலன்ஸ்கி வலியுறுத்தினார்.
உலக சமாதானத்திற்காக, போருக்கு முடிவுகாணும் முயற்சியில் இச்சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.