அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையான வரி நடவடிக்கைகளால் சர்வதேச வர்த்தகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். குறிப்பாக பிரேசிலுக்கு எதிராக அவர் அறிவித்துள்ள 50% வரி நடவடிக்கையை எதிர்க்கும் வகையில், பிரேசில் அதிபர் லூயிஸ் இன்சியோ லுலா டா சில்வா கடும் எச்சரிக்கை வெளியிட்டுள்ளார்.
டிரம்ப் அரசு, பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காப்பர் (தாமிரம்) மற்றும் மருந்துப் பொருட்களுக்கு முறையே 50% மற்றும் 200% வரி விதிக்கப் போவதாக அறிவித்துள்ளது. இது வரும் ஆகஸ்ட் 1ம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இருநாட்டு உறவுகள் மேலும் பதற்றமாகும் நிலை உருவாகியுள்ளது.

இதற்கு பதிலளித்த லுலா, “முதலில் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம். ஆனால் அது நடைபெறாத பட்சத்தில், அந்நிய நாடுகளுக்கு எதிரான நியாயமான பதிலடி நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவர்கள் எங்களுக்கு 50% வரி விதிக்கிறார்கள் என்றால், நாங்களும் அதே அளவு வரி விதிப்போம்” எனக் கடுமையாகச் சாட்டியுள்ளார்.
மேலும், பிரேசில் இந்த விவகாரம் தொடர்பாக உலக வர்த்தக அமைப்பை (WTO) நாடும் எனவும், சர்வதேச விசாரணைகள் மூலம் தீர்வு காண முயலப்போவதாகவும் அதிபர் லுலா தெரிவித்தார். “பிரேசில் இந்த பிரச்சினையில் விரைவில் நடவடிக்கை எடுக்கும். தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்க தயாராக இருக்கின்றோம்” என அவர் கூறினார்.
இந்த மோதலால், ஏற்கனவே பல பிரச்சனைகளில் சிக்கியுள்ள அமெரிக்கா-பிரேசில் வர்த்தக உறவுகள் இன்னும் சிக்கலான நிலைக்கு நகரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. BRICS அமைப்பின் முக்கிய உறுப்பினரான பிரேசிலின் இந்த வலுவான நிலைப்பாடு உலகளாவிய பொருளாதார சூழ்நிலையைத் தாக்கும் வகையில் அமையலாம்.