நியூயார்க்: இந்தியா ரஷ்யாவிலிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி, அதை சுத்திகரித்து சர்வதேச சந்தையில் மறுவிற்பனை செய்வதை அமெரிக்கா கடுமையாக விமர்சித்துள்ளது.
உக்ரைன் போருக்குப் பின்னர் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு பொருளாதார தடைகள் விதித்துள்ளன. ஆனால் இந்தியா தனது எரிசக்தி தேவைகளுக்காக ரஷ்யாவுடன் தொடர்ந்து வணிகம் செய்வது அமெரிக்காவின் அதிருப்தியை அதிகரித்துள்ளது.

அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட், “இந்தியாவின் நடைமுறை ஏற்றுக்கொள்ள முடியாதது. ரஷ்யாவுடன் இவ்வாறு வணிகம் செய்வது உலக பொருளாதாரத் தளர்வுக்கு அபாயம்” என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அமெரிக்கா இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு 50% வரி விதித்துள்ள நிலையில், மருந்துகள், இரசாயனப் பொருட்கள், தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் ஆகியவற்றுக்கும் கூடுதல் வரிகள் விதிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசு, “நாட்டின் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் மட்டுமே ரஷ்ய எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது” என தனது நிலைப்பாட்டை பலமுறை விளக்கியுள்ளது.
ஆனால், அமெரிக்கா தனது அழுத்தத்தை அதிகரித்தால், இந்தியாவின் வர்த்தக உறவுகள், ரூபாயின் மதிப்பு, எரிபொருள் விலை போன்றவை பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.