செப் 21, 2025: அமெரிக்கா H-1B வேலை விசாவிற்கு வருடாந்திர கட்டணத்தை 100,000 டாலராக (சுமார் ரூ.88 லட்சம்) உயர்த்தியது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்ட இந்த புதிய விதி, இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வேலைக்குச் செல்லும் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு பெரிய சவாலாக உள்ளது. குறிப்பாக இந்திய ஐடி ஊழியர்கள் வேலை இழக்கலாம் என்ற அபாயத்தில் உள்ளனர்.

இந்த மாற்றத்துக்குப் பிறகு, மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது வெளிநாட்டு ஊழியர்களுக்கு அவசர எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. H-1B மற்றும் H-4 விசா வைத்துள்ள ஊழியர்கள் உடனடியாக அமெரிக்காவிலேயே தங்கி இருக்க வேண்டும் அல்லது அமெரிக்காவுக்குள் திரும்பி வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு இதற்காக 24 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அமெரிக்காவில் உள்ள ஊழியர்கள் வெளிநாடு பயணம் செய்யாமல் இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. புதிய கட்டண விதி அமலாக்கப்பட்டால், மீண்டும் திரும்பும்போது $1 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும், இது பெரும்பாலோருக்கு சாத்தியமல்ல. இதனால், வெளிநாட்டிலிருந்து திறமையான தொழில்நுட்ப நிபுணர்களை அமெரிக்கா அழைத்துவரும் நடைமுறை மந்தமாகும், வேலை வாய்ப்பு சந்தை பாதிக்கப்படும்.
டிரம்ப் நிர்வாகம், அமெரிக்கர்களுக்கான வேலை வாய்ப்புகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனால், இந்திய தொழில்நுட்பத் துறையினர் மிகப்பெரிய சவாலுக்கு உள்ளாகும், மற்றும் அமெரிக்க நிறுவனங்களும் அதிக செலவுக்கு ஆளாகலாம். மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள் உடனடியாக ஊழியர்களை எச்சரிக்கத் தொடங்கியுள்ளன.