வாஷிங்டன்: பிரதமர் மோடியின் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளுக்கு அமெரிக்கா தனது ஆதரவை மீண்டும் தெரிவித்துள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 இந்திய சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். தாக்குதலை கடுமையாகக் கண்டித்த ஜனாதிபதி டிரம்ப், பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான இந்தியாவின் முயற்சிகளுக்கு அமெரிக்கா முழுமையாக ஆதரவளிக்கும் என்று கூறினார். அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ உள்ளிட்ட முக்கிய பதவிகளில் உள்ள பலர் இந்தியாவுக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், நாடு திரும்பிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்துள்ளன. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ இரண்டு நாட்களுக்கு முன்பு இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் தொலைபேசியில் பேசினார். இந்தியாவும் பாகிஸ்தானும் நிலைமையை தணிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்தியாவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த அமெரிக்க அதிகாரிகளும் இந்திய மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இரு நாடுகளும் ஒரு தீர்வைக் காண வேண்டும். இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையிலான முன்னேற்றங்களை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம் என்று டாமி புரூஸ் கூறினார்.