வாஷிங்டன்: இந்தியா இரண்டு மாதங்களில் அமெரிக்காவிடம் மன்னிப்பு கேட்கும் என்று அந்நாட்டு வர்த்தகத்துறை அமைச்சர் ஹோவார்ட் லுட்னிக் பெருமிதமாக பேசியுள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருவதால், அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது. ஆனால் இந்தியா, அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு இல்லாமல், சீனாவுடன் வணிக உறவுகளை வலுப்படுத்த தொடங்கியுள்ளது. இதனால் அமெரிக்கா – இந்தியா உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய லுட்னிக், “அமெரிக்க சந்தை இல்லாமல் இந்தியாவின் வணிகம் செழிக்காது. அவர்கள் உணர்ந்து விரைவில் மன்னிப்பு கேட்பார்கள். ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் பேச்சுவார்த்தைக்காக முன்வர வேண்டிய சூழ்நிலையில் இந்தியா இருக்கும்” என்று கூறினார். மேலும், “சீனர்களும் இந்தியர்களும் எங்களிடம் விற்பனை செய்கிறார்கள். ஆனால் அவர்களுக்குள் பரிமாற்றம் முடியாது. உலகின் மிகப்பெரிய நுகர்வோர் நாடு அமெரிக்கா என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்” எனவும் வலியுறுத்தினார்.
இதனுடன், “இந்தியாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்வதை பிரதமர் மோடியை எப்படி கையாள வேண்டும் என்பதையும் டிரம்ப் தான் தீர்மானிப்பார்” என்றார். இதே நேரத்தில், “இந்தியா, ரஷ்யா இரண்டையும் சீனாவிடம் இழந்துவிட்டோம்” என்று டிரம்ப் புலம்பியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. லுட்னிக்கின் ஆணவ பேச்சும், டிரம்பின் புலம்பலும், அமெரிக்காவின் தற்போதைய நெருக்கடியை வெளிப்படுத்துவதாக அரசியல் வட்டாரங்கள் விமர்சிக்கின்றன.