வாஷிங்டன்: இந்தியா அமெரிக்காவின் அற்புதமான நட்பு நாடு என அமெரிக்க எரிசக்தி துறை அமைச்சர் கிறிஸ் ரைட் தெரிவித்துள்ளார். “நான் இந்தியாவின் மிகப்பெரிய ரசிகன். நாங்கள் இந்தியாவை நேசிக்கிறோம். ஆனால் அது ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குகிறது என்பதுதான் இருநாட்டின் உறவில் சிக்கலை உருவாக்குகிறது. உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியாவும் விரும்பும் என நம்புகிறோம்” என்று அவர் கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது: “அமெரிக்கா – இந்தியா இடையே எரிசக்தி வர்த்தகம் விரிவடைவதே எங்கள் நோக்கம். இந்த துறையில் இந்தியா ஒரு நட்சத்திரம். ஆனால் ரஷ்ய கச்சா எண்ணெய் சீனா, இந்தியா, துருக்கி ஆகியவற்றின் மூலம் ரஷ்யாவுக்கு நிதி ஆதரவாக மாறுகிறது. இதுவே பிரச்சனை. அதேசமயம், இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகமும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமும் ஆகும்” என்றார்.
மேலும், “உலக அமைதியை நிலைநாட்டுவதே அதிபர் டிரம்பின் முக்கிய குறிக்கோள். உக்ரைனில் நடக்கும் போர் கொடூரமானது. அது முடிவுக்கு வர உலகம் முழுவதும் விரும்புகிறது. அதற்காக எங்கள் செல்வாக்கை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதையே நாம் சிந்திக்கிறோம். இந்தியாவின் பங்களிப்பும் அதில் முக்கியம்” என்று கிறிஸ் ரைட் வலியுறுத்தினார்.
அவரின் இந்தக் கருத்துக்கள், இந்தியா – அமெரிக்க உறவுகள், குறிப்பாக எரிசக்தி துறையில் உள்ள நெருக்கம் மற்றும் சவால்களை வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகின்றன. ரஷ்யா தொடர்பான வர்த்தகச் சிக்கல்கள் இருந்தாலும், இந்தியா – அமெரிக்க நட்பு உறவு வலுவாகவே நீடிக்கும் என வெளிநாட்டு வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.