வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியா அமெரிக்கப் பொருட்களுக்கு 100% வரி விதிக்கிறது என குற்றம் சாட்டியுள்ளார். இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது.
டிரம்ப் கூறியதாவது: “நாங்கள் இந்தியாவுடன் நல்ல உறவை வைத்திருக்கிறோம். ஆனால் அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்கிறது. ஹார்லி டேவிட்சன் பைக்கிற்கு கூட 200% வரி விதிக்கப்பட்டிருக்கிறது. இது வர்த்தக நியாயத்துக்கு புறம்பானது” என்றார். அமெரிக்க சந்தையில் இந்தியப் பொருட்கள் சுதந்திரமாக நுழையும்போது, அமெரிக்க நிறுவனங்களுக்கு தடைகள் விதிப்பது தவறு என அவர் வலியுறுத்தினார்.

அமெரிக்க அதிபர் மேலும் தெரிவித்ததாவது: “பல ஆண்டுகளாக வர்த்தக உறவு ஒருதலைப்பட்சமாக உள்ளது. இந்தியா மீது அதிக வரி விதிக்காமல் இருந்தோம். ஆனால் இப்போது நிலைமை மாறியுள்ளது. இந்தியாவுடன் வலுவான உறவை தொடர விரும்புகிறோம். அதே சமயம் இரு தரப்பினரும் சமமாக செயல்பட வேண்டும்” என்றார்.
இந்த குற்றச்சாட்டு, இந்தியா-அமெரிக்க வர்த்தக உறவை சிக்கலாக்கியுள்ளது. இருநாடுகளும் பொருளாதார நன்மைக்காக ஒருவரை ஒருவர் சார்ந்துள்ள சூழலில், டிரம்பின் இந்த பேச்சு சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் மாதங்களில், இந்த வர்த்தக போர் எவ்வாறு மாறும் என்பது அரசியல் வட்டாரங்களில் ஆர்வமுடன் கவனிக்கப்பட்டு வருகிறது.