அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பல லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை பெற்றுத்தரும் நோக்கில் சவுதி அரேபியாவுக்கு பயணம் செய்துள்ளார். இது அவர் மேற்கொண்ட நான்கு நாள் மேற்கு ஆசிய பயணத்தின் ஒரு பகுதியாகும். முதல் நாளாக சவுதியில் அவரை பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நேரில் வரவேற்றார்.

அவருடன் அமெரிக்க தொழிலதிபர்கள், எலான் மஸ்க் உட்பட பலர் வந்துள்ளனர். ரியாத்தில் இரு நாட்டு முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.சவுதி அரேபியா, ஏற்கனவே அமெரிக்காவில் 50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உறுதியளித்திருந்தது. அந்த தொகையை 85 லட்சம் கோடியாக உயர்த்தும் வழியில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதற்கு பதிலாக அமெரிக்க நிறுவங்களும் சவுதியின் ‘விஷன் 2030’ திட்டத்தின் கீழ், கட்டுமானம், தொழில்நுட்பம், மற்றும் ‘நியோம்’ நகரம் போன்ற வளர்ச்சித் திட்டங்களில் முதலீடு செய்ய ஒப்பந்தங்கள் செய்து கொண்டன.
இந்நிலையில், கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்த உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சவுதி இளவரசர் முன்வைத்தார்.இந்த பயணத்தின் மற்றொரு முக்கிய நிகழ்வாக, கத்தார் மன்னர் குடும்பம், டிரம்புக்கு ரூ.3,400 கோடி மதிப்புள்ள போயிங் 747-8 விமானத்தை பரிசாக வழங்க முன்வந்தது. இது அமெரிக்க அரசியல் வட்டங்களில் விமர்சனத்தை எழுப்பியுள்ளது. எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி, டிரம்பின் கட்சியிலிருந்தே சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதற்குப் பதிலளித்த டிரம்ப், இந்த மாதிரியான பரிசை நிராகரிக்க முடியாது என கூறினார். இது தற்காலிகமாக ஏர் போர்ஸ் ஒன் விமானமாக பயன்படுத்தப்படும் என்றும், தன்னுடைய பதவிக்காலத்திற்குப் பிறகு அதிபர் அருங்காட்சியகத்திற்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.இந்த பரிசு, அவரின் தனிப்பட்ட உள்நோக்கங்கள் குறித்து கேள்விகளை எழுப்புகிறது. எனினும், டிரம்ப் தனது உத்தியோகபூர்வ நடவடிக்கைகளில் நம்பிக்கையுடன் இருக்கிறார். இந்த சந்திப்புகள், இரு நாடுகளின் பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை வலுப்படுத்தும் வகையில் அமையக்கூடும்.