வாஷிங்டன்: ஈரானில் உள்ள மூன்று முக்கிய அணுசக்தி தளங்கள் மீது வெற்றிகரமாக தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சமூக ஊடகத்தில் கூறியதாவது:- “ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்ட ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி தளங்கள் மீது நாங்கள் மிகவும் வெற்றிகரமான தாக்குதலை முடித்துள்ளோம். அனைத்து விமானங்களும் இப்போது ஈரானிய வான்வெளிக்கு வெளியே உள்ளன.
குண்டுகள் முழுமையாக பிரதான தளமான ஃபோர்டோவில் வீசப்பட்டன. அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக வீடு திரும்பி வருகின்றன. நமது சிறந்த அமெரிக்க வீரர்களுக்கு வாழ்த்துக்கள். உலகில் வேறு எந்த இராணுவமும் இதைச் செய்திருக்க முடியாது. இப்போது அமைதிக்கான நேரம். இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி,” என்று டிரம்ப் கூறினார். இந்தத் தாக்குதல்களை நடத்த 2B2 குண்டுவீச்சு விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா இந்த குண்டுகளைப் பயன்படுத்தியது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. முன்னதாக, இஸ்ரேலிய விமானப்படை நேற்று மீண்டும் ஈரானின் இஸ்பஹான் அணுமின் நிலையத்தைத் தாக்கியது. இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் மூன்று ஈரானிய இராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, நேற்று டெல் அவிவ், ஹைஃபா, டான் உள்ளிட்ட இஸ்ரேலிய நகரங்களை குறிவைத்து ஈரானிய இராணுவம் ஏவுகணைகளை வீசியது.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நேற்று 9வது நாளாக தொடர்ந்தது. இஸ்ரேலிய போர் விமானங்கள் ஆரம்பத்திலிருந்தே ஈரானின் அணு மின் நிலையங்களை குறிவைத்து வருகின்றன. அதன்படி, இஸ்ரேலிய போர் விமானங்கள் நேற்று மீண்டும் ஈரானின் இஸ்பஹான் அணு மின் நிலையத்தைத் தாக்கின. அணு மின் நிலையம் கடுமையாக சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.