வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், தேவையெனில் அதிபராக பணியாற்ற தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது டொனால்டு டிரம்ப் நல்ல உடல்நலத்துடன் உள்ளார், மீதமுள்ள காலத்திலும் சிறந்த பணிகளை செய்து முடிப்பார் என்ற நம்பிக்கையையும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜே.டி.வான்ஸ் கூறியதாவது: “டிரம்ப் பல நல்ல காரியங்களை செய்து வருகிறார். ஆனால், எதிர்பாராத சோகம் நேர்ந்தால், நான் அதிபராக செயல்பட தயாராக இருக்கிறேன். கடந்த 200 நாட்களில் நான் பெற்ற அனுபவத்தை விட சிறந்த வேலைப் பயிற்சி எதுவும் இல்லை” என்றார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் உடல்நிலை குறித்து பரவியுள்ள ஊகங்களுக்கு மத்தியில், துணை அதிபரின் இந்த அறிக்கை அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. அதேசமயம், அவர் இந்திய வேர்களை கொண்டவர் என்பதால், இந்தியர்களிடையே அவருக்கு தனி வரவேற்பு உள்ளது.
ஜே.டி.வான்ஸ் 41 வயதில் துணை அதிபராக பொறுப்பேற்றார். அவரின் மனைவி உஷா வான்ஸ், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இதன் மூலம் அவர் “இந்தியாவின் மருமகன்” என்ற பெயரால் இந்திய மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார்.