அமெரிக்க அரசு புதிய நடைமுறைகளை கொண்டு வந்ததையடுத்து, 2026ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்க விசா செலவுகள் இரண்டரை மடங்கு உயர உள்ளன. இதன் காரணமாக, இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலிருந்தும் விண்ணப்பிக்கும் பயணிகள், புதிய கட்டணங்களை அனுசரிக்க வேண்டியுள்ளது.

டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு, விசா நிபந்தனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. தற்போது, மாணவர், சுற்றுலா மற்றும் தொழில்விசாக்களுக்கு கூடுதலாக ‘நேர்மை கட்டணம்’ (Integrity Fee) எனும் புதிய கட்டணம் 250 அமெரிக்க டாலராக (அறுதியாக ரூ. 22,000) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்குமுன், சுற்றுலா அல்லது வர்த்தக விசா செலவு ரூ. 15,855 ஆக இருந்தது. இனி இந்த கட்டணங்களுடன் சேர்த்து, ரூ. 40,456 வரை செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்த உயர்வுகள் “பிக் பியூட்டிபுல் பில்” எனப்படும் புதிய அரசு செலவுத்திட்ட சட்டத்தின் கீழ் அமலுக்கு வருகிறது.
மேலும், இந்த கட்டணங்கள் வருடத்துக்கு வருடம் விலைவாசிக்கேற்ப மாறக்கூடியவை. சில கட்டணங்கள் நிபந்தனைகளின் அடிப்படையில் நாடு திரும்பும் போது திருப்பி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படும் F-1 விசாக்களின் எண்ணிக்கை 2025 பிப்ரவரியில் 30% குறைந்துள்ளதாகவும், மார்ச்-மே மாதங்களில் வெறும் 9,906 மாணவர்களுக்கு மட்டுமே விசா வழங்கப்பட்டதாகவும் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.