வாஷிங்டன்: பாலஸ்தீன மக்களை நோக்கி ஹமாஸ் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாக நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. காசாவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்வைத்த அமைதி திட்டத்தின் அடிப்படையில் தற்போது போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும், ஹமாஸ் மற்றும் அவர்களை எதிர்க்கும் சில குழுக்கள் இடையே பதற்றம் மீண்டும் அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் டிரம்ப், “காசா மக்களை கொல்வதை நிறுத்த வேண்டும். இல்லையெனில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று கடுமையாக எச்சரித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, ஹமாஸ் சார்பில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தப்படும் என்ற தகவல்கள் காசா அமைதி ஒப்பந்த உத்தரவாத நாடுகளுக்கு கிடைத்துள்ளன என அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இத்தகைய தாக்குதல்கள் டிரம்ப் மத்தியஸ்தம் செய்த அமைதி ஒப்பந்தத்தை நேரடியாக மீறுவதாகும். ஹமாஸ் தாக்குதலை மேற்கொண்டால், காசா மக்களைப் பாதுகாக்கவும், பிராந்திய அமைதியை நிலைநிறுத்தவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என எச்சரித்துள்ளது.
மேலும், “காசா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைதி நிலைபேறாக இருக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. எந்தவித மோதலும் மீண்டும் வெடிக்காமல் தடுக்க அனைத்துநாடுகளும் ஒத்துழைக்க வேண்டும்,” என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.