பஹல்காம் தாக்குதலை அடுத்து, இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்தது. பின்னர் இருநாடுகளின் ராணுவ மட்ட பேச்சுவார்த்தையில்தான் தாக்குதல் நிறுத்தப்பட்டது. இதற்கிடையில், இந்த மோதலை நிறுத்தியவர் தானே என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். ஆனால் இந்தியா, இந்தக் கருத்தை முற்றிலும் மறுத்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் துணை பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான முகமது இஷாக் தர் விளக்கம் அளித்துள்ளார். மோதலை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ய முன்வந்தது உண்மை என்றாலும், இந்தியா அதனை ஏற்க மறுத்ததாகவும், இருநாடுகளுக்கிடையிலான பிரச்சினைகள் இருதரப்பு அடிப்படையிலேயே தீர்க்கப்பட வேண்டும் என இந்தியா வலியுறுத்தியதாகவும் அவர் கூறினார்.
மேலும், பயங்கரவாதம், வர்த்தகம், பொருளாதாரம், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சினைகளை விவாதிக்க பாகிஸ்தான் தயாராக இருப்பதாகவும் இஷாக் தர் தெரிவித்தார். அமெரிக்காவின் தலையீட்டை பாகிஸ்தான் எதிர்க்கவில்லை என்றாலும், இந்தியாவின் உறுதியான மறுப்பு தான் நிலைமையை தீர்மானித்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதன் மூலம், அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய கூற்றை மறுத்து வந்த இந்திய நிலைப்பாடு, பாகிஸ்தான் துணை பிரதமரின் கருத்தின் மூலம் மேலும் உறுதிப்படுத்தப்பட்டது.