ஈரானுடன் அமெரிக்காவின் இடையே நிலவும் கடும் பதற்றமான சூழ்நிலையில், அமெரிக்க மக்கள் அந்த நாடுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக இஸ்ரேல்-ஈரான் இடையே நடந்த ஆக்கிரமணங்களும் தாக்குதல்களும், குறிப்பாக அமெரிக்கா ஈரானின் அணுசக்தி மையங்களை குறிவைத்து நடத்திய தாக்குதல்களும், ஈரானை பெரும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

இந்தச் சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை மையமாகக் கொண்டு, ஈரான் அரசியல் தலைவர்கள் பல்வேறு முறையில் விமர்சனம் செய்தும், மிரட்டல்களும் விடுத்தும் வருகின்றனர். இதன் விளைவாக, இருநாடுகளுக்கு இடையேயான உறவுகள் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. பாதுகாப்பு நிலைமை கடுமையாக மாறி, பொதுமக்கள் பயணங்களைத் தவிர்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் டாமி ப்ரூஸ், “ஈரானுக்கு செல்ல திட்டமிட்டுள்ள அமெரிக்கர்கள் – குறிப்பாக ஈரானிய-அமெரிக்க இரட்டை குடிமக்கள் – கடுமையான அபாயங்களை எதிர்கொள்வார்கள்” என தெரிவித்துள்ளார். ஈரான் இரட்டை குடியுரிமையை ஏற்காததால், அங்கு கைது செய்யப்பட்ட அமெரிக்கர்களுக்கு தூதரக உதவிகள் வழங்க முடியாது என்றும் அவர் கூறினார்.
தற்போது தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும், பாதுகாப்பு நிலைமை சீராக இல்லாததால் ஈரான் பயணத்தை முழுமையாக தவிர்க்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக, அரசாங்கம் தனியாக ஒரு இணையதளத்தையும் உருவாக்கியுள்ளது. இச்செய்தி, ஈரான் பயணத்துக்குத் தயாராக இருந்த அமெரிக்க குடிமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.