டோக்கியோ: ஜப்பானில் சைக்கிள் ஓட்டும் போது மொபைல் போன் பயன்படுத்தினால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. ஜப்பானில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் சைக்கிள் போக்குவரத்தை விரும்புகிறார்கள்.
கோவிட் பரவிய பிறகு, சைக்கிள் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை வியத்தகு அளவில் அதிகரித்தது. கடந்த சில நாட்களாக சைக்கிள் ஓட்டும்போது கவனக்குறைவால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 72 ஆயிரம் சைக்கிள் விபத்துகள் நடந்துள்ளன. இது நாடு முழுவதும் நடக்கும் மற்ற வாகன விபத்துகளில் 20 சதவீதம் ஆகும்.
இருசக்கர வாகன விபத்துகளை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து அரசு ஆலோசனை நடத்தியது. பெரும்பாலான மக்கள் சைக்கிள் ஓட்டும் போது மொபைல் ஃபோனைப் பயன்படுத்துவதால் அதிக எண்ணிக்கையிலான விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதுவே விபத்துக்கு முக்கிய காரணம் என கண்டறியப்பட்டது. இதனால், போக்குவரத்து விதிகளில் புதிய திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, சைக்கிள் ஓட்டும்போது மொபைல் போனில் பேசவோ, இன்டர்நெட் பயன்படுத்தவோ கூடாது.
மீறுபவர்களுக்கு 6 மாத சிறைத் தண்டனை அல்லது ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும். குடிபோதையில் சைக்கிள் ஓட்டினால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ரூ.2¾ லட்சம் அபராதம் விதிக்கப்படும். இதனால், போக்குவரத்து விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.