இந்தியா-அமெரிக்கா இடையே முக்கியமான பாதுகாப்பு ஒப்பந்தமாக போர் ட்ரோன் வாங்கும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. பாதுகாப்பு அமைச்சகம், இந்திய விமானப்படைக்கு தேவையான நவீன போர் ட்ரோன்களை கொள்முதல் செய்யும் பணியில் இறங்கியுள்ளது. இந்த ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது. ஒப்பந்தம் கையெழுத்தானவுடன், 2026ம் ஆண்டு முதல் காலாண்டிலேயே இந்த ட்ரோன்கள் இந்தியாவை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, ஆபரேஷன் சிந்தூர் எனப்படும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஆயுத கொள்முதலுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட, நீண்ட தூரம் செல்லக்கூடிய, நெட்வொர்க் தடைகள் இருந்தாலும் இயங்கக்கூடிய அமெரிக்க ட்ரோன்களை இந்தியா வாங்கும் திட்டத்தில் உள்ளது. இது அவசரகால கொள்முதல் திட்டத்தின் கீழ் நடந்து வருகிறது.
35 மில்லியன் டாலர் மதிப்பில் ஆரம்ப கட்ட ஒப்பந்தம் நடைபெறுகிறது. இவை உக்ரைனில் ரஷ்யா மீது நடத்திய தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட “ஷீல்ட் ஆலின் விபேட்” மாதிரி போர் ட்ரோன்களை ஒத்தவையாக இருக்கும். இவை GPS இல்லாத, ஜாமிங் செய்யப்பட்ட சூழ்நிலைகளிலும் செயல்படக்கூடிய தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன. இந்திய உள்நாட்டு ட்ரோன்களுடன் ஒப்பிட்டால், இவை மிக மேம்பட்டவை என கூறப்படுகிறது.
இந்த நவீன ட்ரோன்கள் நாட்டின் பாதுகாப்பு திறனில் பெரும் வளர்ச்சியை கொண்டு வரும். இந்தியா தனது பாதுகாப்பு முன்னேற்றங்களை உறுதி செய்யும் வகையில் உலகத் தரத்தில் உள்ள நவீன ஆயுதங்களை இறக்குமதி செய்யும் பணியை உறுதிப்படுத்தி வருகிறது. அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு இதன்மூலம் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.