கொழும்பு: இலங்கையில் அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. இதில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் வெடித்தது.
இதன் காரணமாக ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ 2022 ஜூலை 14-ம் தேதி பதவி விலகினார்.அவர் தலைமையிலான அரசாங்கத்தில் அங்கம் வகித்த ராஜபக்ஷ குடும்பமும் வெளியேறியது.
ரணில் விக்கிரமசிங்க புதிய ஜனாதிபதியாக ஜூலை 20, 2022 அன்று பதவியேற்றார். இதைத் தொடர்ந்து பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் ஓரளவு பலமடைந்துள்ளது.
இந்நிலையில் இலங்கையில் புதிய அதிபர் தேர்தல் இன்று நடைபெற உள்ளது. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, இடதுசாரி அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுனாவின் தலைவர் அனுரா குமாரா திஸாநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் இரு தரப்புப் போட்டியாக இருந்த நிலையில், இந்தத் தேர்தல் பலமுனைப் போட்டியாக உள்ளது. ஆனால், இந்த தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது. குறைந்த பட்சம் 50 சதவீத பெரும்பான்மை வாக்குகளைப் பெறுபவரே ஜனாதிபதியாக முடியும்.
இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இதற்காக இலங்கை முழுவதும் 13,400 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
அப்போது இலங்கையின் புதிய ஜனாதிபதி யார் என்பது தெரியவரும். இந்தத் தேர்தலில் நாடு முழுவதும் உள்ள 1.7 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.