வாஷிங்டனில் வெளியான புளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் தரவரிசை உலகளாவிய தொழில்துறையில் பெரும் அதிர்வலை கிளப்பியது. எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் 385 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் இருந்தார். ஆனால் ஒராகிள் நிறுவனர் லேரி எல்லிசன் 393 பில்லியன் டாலர் மதிப்புடன் தற்காலிகமாக அந்த இடத்தை பிடித்தார். சில மணி நேரங்களிலேயே பங்குச் சந்தை மாற்றத்தால் எலான் மஸ்க் மீண்டும் முதலிடத்திற்கு திரும்பினார்.

81 வயதான லேரி எல்லிசன், ஒராகிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் மட்டுமல்லாமல் அதன் வளர்ச்சியின் அடித்தளமாகக் கருதப்படுகிறார். அண்மையில் ஒராகிள் பங்குகள் 41% உயர்ந்தன. புக்கிங், உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை தந்ததால், ஒரே நாளில் 89 பில்லியன் டாலர் உயர்வை அந்த நிறுவனம் கண்டது. இது வரலாற்றிலேயே மிகப்பெரிய ஒரு நாள் வளர்ச்சியாகும்.
எலான் மஸ்க் 2021ல் முதல்முறையாக உலகின் பணக்காரர் பட்டியலில் முதலிடம் பிடித்தார். பின்னர் ஜெப் பெசோஸ் மற்றும் பெர்னார்டு அர்னால்ட் ஆகியோரிடம் அந்த இடத்தை இழந்தார். ஆனால் கடந்த ஆண்டு மீண்டும் முதலிடத்தை பிடித்த அவர், தற்போது எல்லிசனுடன் நெருக்கடியான போட்டியில் உள்ளார். இவர்களின் சொத்து மதிப்பு இடையிலான வித்தியாசம் பங்கு சந்தை மாற்றத்தால் சில மணி நேரங்களிலேயே மாறுகிறது.
இந்திய தொழிலதிபர்களில் முகேஷ் அம்பானி 97.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 18வது இடத்திலும், கவுதம் அதானி 80.9 பில்லியன் டாலர் மதிப்புடன் 21வது இடத்திலும் உள்ளனர். உலகின் நம்பர் ஒன் பணக்காரர் இடத்தை கைப்பற்றும் இந்த கடும் போட்டி, அமெரிக்காவை மட்டுமல்ல உலகளாவிய வணிக உலகையே கவர்ந்துள்ளது.