புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 2023ம் ஆண்டு 16 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெஃப் இணைந்து வெளியிட்ட தரவுகள் மூலம் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், இந்தியாவில் கடந்த 2023-ம் ஆண்டு சுமார் 16 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் அதிக குழந்தைகளுக்கு தடுப்பூசி போடாத மோசமான நாடுகளின் பட்டியலில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. நம்பர் ஒன் நாடான நைஜீரியாவில் 2.1 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படவில்லை. இந்தப் பட்டியலில் இந்தியாவைத் தொடர்ந்து எத்தியோப்பியா, காங்கோ, சூடான் மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகள் உள்ளன.
முதல் 20 நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் 10வது இடத்திலும், சீனா 18வது இடத்திலும் உள்ளன. கடந்த 2021ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, 2023ஆம் ஆண்டில் இந்தியாவின் நிலை சற்று மேம்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டில், நாட்டில் தடுப்பூசி போடப்படாத குழந்தைகளின் எண்ணிக்கை உலகிலேயே அதிகபட்சமாக 27.3 லட்சமாக இருந்தது.
2021 ஆம் ஆண்டில் தடுப்பூசி போடப்படாத குழந்தைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், இந்தியா உட்பட 20 நாடுகளில் நோய்த்தடுப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிறிய முன்னேற்றம் இருப்பதால், இந்த எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தடுப்பூசி போடப்படாத குழந்தைகளைக் கண்டறிந்து தடுப்பூசி போட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.