கோவை: பில்லூர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. தொடர்ந்து 2வது நாளாக அணை நிரம்பி வருவதால் அணைக்கு வரும் தண்ணீர் நேரடியாக பவானி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தாலுகா பில்லூர் வனப்பகுதியில் பில்லூர் அணை கட்டப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 100 அடியாக உள்ளது. அணையின் பாதுகாப்பு நலன் கருதி அணையின் நீர்மட்டம் 97 அடியாக உயரும் போது அணை நிரம்பியதாக அறிவித்து அணைக்கு வரும் தண்ணீர் முழுவதையும் பவானி ஆற்றில் திறந்து விடுவது வழக்கம்.
நேற்று (ஜூலை 15) பில்லூர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் அணைக்கு வினாடிக்கு 18,120 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் நேற்று காலை பில்லூர் அணை 97 அடியை எட்டியதை அடுத்து நிரம்பியது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவும் பலத்த மழை பெய்தது. எனவே அணைக்கு அதிகபட்சமாக வினாடிக்கு 20,000 கனஅடி நீர் வரத்து உள்ளது.
அணை ஏற்கனவே நிரம்பியுள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் நேரடியாக பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பில்லூர் அணை இரண்டாவது நாளாக நிரம்பி வருகிறது. மேலும், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.