சென்னை: ‘வாழும் கைவினைப் பொக்கிஷம்’ விருதுகளை 8 கைவினைஞர்களுக்கும், ‘பூம்புகார் மாநில விருது’களை 10 சிறந்த கைவினைஞர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 2022-23-ம் ஆண்டுக்கான ‘வாழும் கைவினைப் பொக்கிஷம்’ விருதுகளை, பித்தளை கலைப் பொருட்கள் பிரிவில் காஞ்சிபுரம் ந.பாலகிருஷ்ணன் மற்றும் தஞ்சாவூர் கே.பி. உமாபதி, சுடு களிமண் பிரிவில் திருநெல்வேலி சா.ராஜகோபால், கற்சிற்பம் பிரிவில் திருவண்ணாமலை ந.மணி ஆச்சாரி, கோவில் நகைகள் பிரிவில் கன்னியாகுமரி சி.முத்துசுவாமி ஆச்சாரி, இசைக்கருவி பிரிவில் தஞ்சாவூர் சு.கோவிந்தராஜ், கோரைப்பாய் நெசவு பிரிவில் திருநெல்வேலி ப.சுலைகாள் பீவி, இயற்கை நார் பொருட்கள்பிரிவில் கன்னியாகுமரி செ.தங்க ஜோதி ஆகிய 8 பேருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
விருதாளர்களுக்கு தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை 8 கிராம் தங்கப் பதக்கம், தாமிரப் பத்திரம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதேபோல், 2022-23-ம் ஆண்டுக்கான பூம்புகார் மாநில விருதுகளானது, தஞ்சாவூர் ஓவியம் பிரிவில் தஞ்சாவூரைச் சேர்ந்த சி.ரவி, ச.நாகலெட்சுமி, புதுக்கோட்டையைச் சேர்ந்த மா.ராஜப்பா ஆகியோருக்கும், இசைக்கருவி பிரிவில் தஞ்சாவூர் ம.முருகேசன், தஞ்சாவூர் கலைத்தட்டு பிரிவில் ரா.லோகநாதன், சித்திரத்தையல் பிரிவில் கன்னியாகுமரி ந.பூவம்மாள், கற்சிற்பம் பிரிவில் செங்கல்பட்டு ப.வரதன், மு.ராஜரத்தினம், மரச்சிற்பம் பிரிவில் கள்ளக்குறிச்சி ரா.சக்திவேல், மூங்கில்பாய் ஓவியம் பிரிவில் கன்னியாகுமரி செ.லில்லி மேரி ஆகிய 10 விருதாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். விருதாளர்களுக்கு தலா ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை, 4 கிராம் தங்கப் பதக்கம், தாமிரப் பத்திரம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ. அன்பரசன், தலைமைசெயலர் சிவ்தாஸ் மீனா, கைத்தறி, கைத்திறத்தொழில் துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் மேலாண் இயக்குநர் கவிதா ராமு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.