சென்னை: உயர்கல்வித்துறை சார்பில் புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல்லில் உள்ள கல்லூரிகளுக்கு ரூ.52.75 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறைகள் மற்றும் ஆய்வக கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நான் முழுவன், புதுமைப்பெண் போன்ற திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புதுக்கோட்டை, ஆலங்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தற்காலிக கட்டடங்களில் இயங்கி வந்த ரூ. 12.40 கோடியும், திருமயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.12.46 கோடியும், திருச்சி மண்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.14.94 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.3 52 கோடியில் 8 ஆய்வக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இதேபோல் கோவை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரூ.9.43 கோடியில் 15 வகுப்பறைகள், 10 ஆய்வக கட்டிடங்கள் உள்பட ரூ.52.75 கோடியில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வி கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் க.பொன்முடி, தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா, உயர்கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ், தொழில்நுட்பக் கல்வி ஆணையர் வீரராகவராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.