நாமக்கல்: ஓமன் நாட்டின் மஸ்கட்டில் கோடை காலம் நீடிப்பதால், நாமக்கல்லில் இருந்து அந்த நாடுகளுக்கான முட்டை ஏற்றுமதி குறைந்துள்ளதாக, முட்டை ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் தினமும் 4 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. இதில் 70 லட்சம் முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக சவூதி அரேபியா, ஈரான், ஈராக், ஓமன், பஹ்ரைன், மஸ்கட் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் மஸ்கட் உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடை காலம் நிலவி வருகிறது. அதனால், அந்த நாடுகளில் முட்டை நுகர்வு கணிசமாக குறைந்துள்ளது.
இதனால் அந்த நாடுகளுக்கான முட்டை ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளதாக முட்டை ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். நாமக்கல்லை சேர்ந்த முட்டை ஏற்றுமதியாளர் பன்னீர்செல்வம் கூறுகையில், ”மஸ்கட், ஓமன் ஆகிய நாடுகளில் தற்போது கோடை காலம். அதனால் அங்குள்ள பள்ளிகள் தற்போது மூடப்பட்டுள்ளன. இதனால், அங்கு வசிக்கும் பெரும்பாலான இந்தியர்கள் சொந்த ஊருக்கு திரும்பி விட்டனர். அதனால், அந்த நாடுகளில் முட்டை நுகர்வு கணிசமாக குறைந்துள்ளது. இதற்கிடையில், மஸ்கட் மற்றும் ஓமன் நாடுகளில் முட்டை உற்பத்தி இருப்பதால், அங்கு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் அந்நாட்டு மக்களுக்கு போதுமானதாக உள்ளது.
இதுவும் முட்டை ஏற்றுமதி சரிவுக்கு காரணம். அங்கே கோடை முடிய இன்னும் ஒரு மாதம்தான் இருக்கிறது. அதன் பின்னரே முட்டை ஏற்றுமதி சீராகும். ஆப்ரிக்க நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால், தூரம் இருப்பதால் முட்டை ஏற்றுமதி செய்வதில் சிரமம் உள்ளது. முட்டை ஏற்றுமதியாளர்கள் கூட்டம் மஸ்கட்டில் நடைபெறவுள்ளது. இதில் இந்தியாவில் இருந்து முட்டை ஏற்றுமதியாளர்கள் பங்கேற்க உள்ளனர். அந்த கூட்டத்தில், முட்டை ஏற்றுமதியில் உள்ள பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும்,” என்றார்.