பெங்களூரு: தமிழகத்திற்கு வரும் 31ம் தேதி வரை வினாடிக்கு 11,500 கனஅடி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு கடந்த 11ம் தேதி நடந்த காவிரி மேலாண்மை குழு கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக அரசு, வினாடிக்கு 8,000 கன அடி தண்ணீர் திறந்து விடுவதாக அறிவித்தது.
இந்நிலையில், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை 7 மணி நிலவரப்படி கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வினாடிக்கு 25 ஆயிரத்து 933 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் 124.80 அடி உயரமுள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 107.60 அடியாக உயர்ந்துள்ளது.
ஹேமாவதி அணைக்கு 14 ஆயிரத்து 550 கன அடி தண்ணீரும், ஹாரங்கி அணைக்கு 12 ஆயிரத்து 827 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது. மைசூருவில் உள்ள கபினி அணைக்கு வினாடிக்கு 29 ஆயிரத்து 360 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், 19.52 டிஎம்சி முழு கொள்ளளவு கொண்ட கபினி அணையின் கொள்ளளவு 19.25 டிஎம்சியாக அதிகரித்துள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேகேதாடு அணையால் தமிழகத்துக்கு லாபம்: கர்நாடக துணை முதல்வரும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் நேற்று சட்டப்பேரவையில் பேசுகையில், “கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழையால் தமிழகத்துக்கு இதுவரை 40 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
அதேபோல் மழை பெய்தால் இரு மாநிலங்களுக்கு இடையே காவிரி பிரச்னை இருக்காது. ஆனால் வறட்சி காலங்களில் தண்ணீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இதை தடுக்க மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடகா முடிவு செய்துள்ளது. இவ்வாறு அணை கட்டப்பட்டால் தமிழகம் அதிக பயன் பெறும். எனவே மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்க வேண்டும்’’ என்றார்.