சென்னை: தமிழகத்தில் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் படுகொலைகள் அதிகரித்து வருவதால் தலைவர்களின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார்.
தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் முன்பு படுகொலை செய்யப்பட்டார். அயனாவரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே இன்று (ஜூலை 17) சென்றார். ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நேரில் சென்று ஆறுதல் கூறினார். பின்னர், ஆம்ஸ்ட்ராங் படத்திற்கு ராம்தாஸ் அத்வாலே மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பாதுகாப்பை அதிகரிக்கவும்!
ராம்தாஸ் அத்வாலே நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் தலித் சமூகத்தினர் கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் தலைவர்களின் பாதுகாப்பு முக்கியமானது. கிருஷ்ணசாமி, திருமாவளவன், ஜான்பாண்டியன் உள்ளிட்ட தலைவர்களின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.
சி.பி.ஐ., விசாரணை
தமிழகத்தில் கலப்புத் திருமணக் கொலைகளும் அதிகரித்துள்ளன. ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ளேன். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.