சென்னை: வருமான வரித்துறை 2024-25 நிதியாண்டுக்கான (மதிப்பீட்டு ஆண்டு 2025-26) வருமான வரி அறிக்கை படிவங்களை வெளியிட்டு உள்ளது. இதில் பார்ம் 1 மற்றும் 4 மட்டுமே தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இவை அனைவருக்கும் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. படிப்படியாக மக்களுக்கு இவை அணுகப்படும் வகையில் திறக்கப்பட்டு வருகின்றன. ஏப்ரல் மாதம் முழுவதும் இந்த படிவங்கள் கிடைக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தாமதம் காரணமாக வருமான வரி தாக்கல் செய்யும் கடைசி தேதி தள்ளிப் போக வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர். வழக்கமாக ஜூலை 31 ஆம் தேதி வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். ஆனால் இந்த முறை அந்த தேதி நீட்டிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஏற்கனவே ஒரு மாதம் கடந்த நிலையில், மக்கள் அவசரமாக தாக்கல் செய்யும் சூழ்நிலை உருவாகலாம். பலர் தாக்கல் செய்யாமல் இருக்கக்கூடும் என்ற சாத்தியமும் உள்ளது.

வருமான வரி தாக்கல் தொடர்பான இந்த தாமதம், வரி செலுத்துவோர் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களிடையே கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்த ஆண்டுக்கான வரி கொள்கைகள் மற்றும் புதிய மற்றும் பழைய வரி திட்டங்கள் (regimes) ஏற்கனவே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டும் கூட, அதற்கேற்ப ITR படிவங்கள் வெளியாகவில்லை.
31 ஜூலை 2025 ஆம் தேதி, தணிக்கை தேவையில்லாத தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தாக்கல் செய்ய வேண்டிய கடைசி நாள் ஆகும். தணிக்கை தேவைப்படும் வணிகங்கள் மற்றும் நிபுணர்களுக்கான கடைசி நாள் 31 அக்டோபர் 2025 ஆகும். பரிமாற்ற விலை விதிகளுக்கு உட்பட்ட நிறுவனங்களுக்கு 30 நவம்பர் 2025 கடைசி தேதி ஆகும்.
இந்த காலக்கெடுகள் தாமதமாகும் வாய்ப்பு உள்ளது. வருமான வரி போர்டல் திறக்காததற்கான ஒரு முக்கியமான காரணம், அதன் பின்புற வேலைகள் இன்னும் நடைபெற்று வருகின்றன. புதிய மற்றும் பழைய வரி திட்டங்களை ஏற்கும் வகையில் போர்டல் மென்பொருளில் திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
மென்பொருள் கருவிகள் — JSON, Java, Excel பதிப்புகள் — இன்னும் சோதனை நிலையில் உள்ளன. அதேபோல, வருமானத் தகவல் அறிக்கைகள் (AIS) மற்றும் வரி தகவல் சுருக்கம் (TIS) ஆகியவை முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட பின்பே போர்டல் திறக்கப்படும்.
ITR-1 மற்றும் ITR-2 போன்ற படிவங்கள் சமீபத்தில் திறக்கப்பட்டு வருகின்றன. இப்போது தாக்கல் செய்பவர்களுக்கு அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள் வருமான வரி ரீபண்ட் வழங்கப்படும். ஏற்கனவே தாக்கல் செய்தவர்கள் 15–20 நாட்களில் ரீபண்ட் பெற முடியும்.
வருமான வரி தாக்கல் கட்டாயம் என்கிறது அரசு. நீங்கள் அந்த வரி ஸ்லாப் (slab) இல் இருந்தால் தவறாமல் தாக்கல் செய்ய வேண்டும். தவறான தகவல்கள் மற்றும் தாமதங்கள், ரீபண்ட் தொகையை இழக்கச் செய்யக்கூடும்.