மாறி வரும் உணவுப் பழக்கங்கள், குறைந்த உடற்பயிற்சி, முறையற்ற தூக்க முறை என வாழ்க்கைமுறை மாற்றங்கள் நாளுக்கு நாள் ஃபேட்டி லிவர் நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து வருகின்றன. இந்த நிலையை கட்டுப்படுத்த semaglutide என்ற தடுப்பூசியை பயன்படுத்தும் நோயாளிகள், வாரம் ஒரு முறை 2.4 மில்லிகிராம் அளவில் எடுத்துக் கொள்கின்றனர். தற்போது இந்த மருந்து சோதனையின் மூன்றாவது கட்டத்தில் உள்ளதாக New England Journal of Medicine தெரிவித்துள்ளது. இதில் பங்கேற்ற நோயாளிகளில் மூன்றில் ஒருவருக்கு நோயின் தீவிரம் கணிசமாக குறைந்துள்ளதைக் கண்டறிந்துள்ளனர்.

அல்கஹால் சாப்பிடாதவர்களிடையே ஏற்படும் கொழுப்பு கல்லீரல் நோய், வளர்சிதை மாற்ற செயலிழப்பு சார்ந்த ஸ்டீட்டோடிக் கல்லீரல் நோய் எனப்படும் MAFLD, நாட்டில் 9% முதல் 32% மக்களுக்குள் பரவியுள்ளது. இந்த நோயின் போது, கல்லீரலில் அதிகமான கொழுப்பு சேமிக்கப்படுகிறது. இது அழற்சி ஏற்படுத்தி கல்லீரல் பாதிப்பை தீவிரமாக்கும். நீண்டகாலத்தில் இது கல்லீரல் புற்றுநோயாக மாறக்கூடிய ஆபத்தும் உள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்துடன் பேசிய கல்லீரல் நிபுணர் எஸ்கே சரின், semaglutide தடுப்பூசியைப் பெற்ற நோயாளிகளில் 62.9% பேர் கல்லீரல் கொழுப்பை குறைத்ததாகவும், 34.3% பேர் அழற்சி குறைவடைந்ததாகவும் கூறியுள்ளார். அவர்கள் சராசரியாக தங்களது உடல் எடையில் 10% வரை குறைவு கண்டுள்ளனர்.
இந்த மருந்து, GLP-1 வகை மருந்துகளின் ஒரு பகுதியாகும். இது உடலில் இன்சுலின் சுரப்பை ஊக்குவிக்கிறது, குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்துகிறது, செரிமானத்தை மெதுவாக்கி பசியைக் குறைக்கும் எனப் பல்வேறு முறையில் செயல்படுகிறது. எனினும், இந்த மாற்றங்களுக்கு மருந்து மட்டுமே காரணமாக இருக்கிறதா என்பது இன்னும் முழுமையாக உறுதி செய்யப்படவில்லை.
எடை இழப்பு MAFLD-யை கட்டுப்படுத்தும் முக்கியமான வழியாக இருந்து வருகிறது. உடல் எடையில் 7-10% வரை குறைக்கும் போது கல்லீரல் கொழுப்பு குறைகிறது. மேலும் 10%க்கும் அதிக எடை இழப்பினால் கல்லீரலில் ஏற்படும் பிணைப்புகள் (fibrosis) குறைவடைகின்றன. இந்த மாற்றங்கள் மருந்து இல்லாமலும் உணவுப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சி மூலமாகவும் ஏற்படக்கூடியவை.
MAFLD-க்கு எடை குறைத்தல் என்பது முதன்மையான சிகிச்சை. ஆனால் உடல் இயக்க முடியாதவர்களுக்கோ, உணவுப் பழக்க மாற்றத்தால் எடை குறைக்க முடியாதவர்களுக்கோ இந்த வகை மருந்துகள் உதவுகின்றன. எனினும், இவை வாந்தி, குமட்டல், வயிற்று முடக்கம், கணைய அழற்சி, தைராய்டு புற்றுநோய் போன்ற பக்கவிளைவுகளையும் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
தற்போது MAFLD-க்கு மூன்று வகையான மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. ஒன்று, GLP-1 வகை மருந்துகள். இரண்டாவதாக, தைராய்டு ஹார்மோன்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் resmetirom எனப்படும் மருந்து. இது மாதம் சுமார் 5,400 அமெரிக்க டாலர் என விலை உயர்ந்தது. மூன்றாவதாக, கொழுப்பு திசுக்களில் வேலை செய்யும் FGF21 மருந்துகள். இவை எடை இழப்பை ஊக்குவிக்கும் மூலமாக கல்லீரலை மேம்படுத்துகின்றன.
இந்த தடுப்பூசி குறித்த சோதனை முடிவுகள் ஆராய்ச்சியாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவில் பரவலாகக் காணப்படும் இந்த நோயின் எதிர்கால சிகிச்சைகளில் semaglutide முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்பது நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.