தஞ்சாவூர்: தஞ்சை மாநகராட்சி பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று இன்லைன் ஹாக்கி போட்டியில் இந்திய அணிக்கு தேர்வாகி சர்வதேச போட்டி நடைபெற உள்ள தென்கொரிய நாட்டிற்கு செல்ல உள்ள மாணவர்கள் மேயர் மற்றும் துணை மேயரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தஞ்சாவூர் அண்ணாநகர் 10-வது தெருவை சேர்ந்தவர் ராஜகுமாரி . இவரது மகன் செல்வசுந்தரம் (18). இவர் திருச்சியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நீடாமங்கலம் அஸ்கான்ஓடை பகுதியை சேர்ந்தவர் குபேரன் மகன் யோகன்சரண் (17) . இவர் தஞ்சாவூர் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த மாணவர்கள் இரண்டு பேரும் சிறுவயதிலிருந்தே படிப்போடு விளையாட்டிலும் அதிக ஆர்வம் செலுத்தி வந்தனர் . இன்லைன் ஹாக்கி விளையாட்டில் திறமை வாய்ந்தவர்களாக இருந்தனர். இதனால் மாவட்ட, மாநில அளவில் நடந்த பல்வேறு போட்டிகளில் விளையாடி சாதனை படைத்தனர்.
தஞ்சாவூர் ஸ்கேட்டிங் அகடாமியில் சேர்ந்து பயிற்சியாளர் ராஜூவின் பயிற்சியில் தங்களது விளையாட்டுத் திறனை மேம்படுத்திக் கொண்டனர். இத்தாலியில் நடந்த போட்டியிலும் பங்கேற்று திறம்பட விளையாடி சாதனை படைத்தனர். இத்தாலி செல்வதற்கான அனைத்து நிதி உதவிகளையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டது.
இந்நிலையில் சர்வதேச போட்டியில் விளையாடுவதற்கான தகுதி தேர்வு கோயமுத்தூர், சண்டிகரில் நடைபெற்றது . இதில் மாணவர்கள் செல்வசுந்தரம், யோகன்சரண் பங்கேற்று இந்திய அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து வருகிற ஜூலை மாதம் தென்கொரியா நாட்டில் ஏசியன் ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்-2025 இன்லைன் ஹாக்கி போட்டி நடைபெற உள்ளது.
இதில் இந்திய அணியில் ஜூனியர் பிரிவில் மாணவர்கள் இரண்டு பேரும் விளையாடுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் . இதற்காக தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோரை மாணவர்கள் செல்வசுந்தரம், யோகன்சரண் ஆகியோர் தங்களது பெற்றோருடன் வந்து சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதுகுறித்து மாணவர்கள் செல்வ சுந்தரம் , யோகன்சரண் கூறும்போது, இன்லைன் ஹாக்கி விளையாட்டு போட்டியில் பங்கேற்று விளையாட நிதி உதவி அளித்து தொடர்ந்து ஊக்கப்படுத்தி வரும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் உறுதுணையாக உள்ள அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்திய அணியில் இடம் பிடித்து விளையாட உள்ளோம். தொடர்ந்து நன்றாக விளையாடி தமிழ்நாட்டிற்கும் ,இந்தியாவிற்கும் பெருமை சேர்ப்போம் என்றனர்.