டேராடூன்: உத்தராகண்டில் சார்தாம் யாத்திரை தொடங்கிய பிறகு, புகழ்பெற்ற கேதார்நாத் கோயில் நேற்று வழிபாட்டிற்காக திறக்கப்பட்டது. உத்தரகண்டில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய புனித தலங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இது சார்தாம் யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. இமயமலையில் அமைந்துள்ள இந்த கோயில்கள் கோடையில் 6 மாதங்களுக்கு மட்டுமே பக்தர்களுக்காக வழிபாட்டிற்காக திறக்கப்படும்.
இந்நிலையில், உத்தரகண்டில் ஆண்டுதோறும் சார்தாம் யாத்திரை கடந்த புதன்கிழமை தொடங்கியது. அன்று, கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோயில்கள் திறக்கப்பட்டன. இந்த நிலையில், கேதார்நாத் கோயில் நேற்று காலை 7 மணிக்கு 3-வது கோயிலாக திறக்கப்பட்டது. இமயமலையில் சுமார் 11,000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது 11-வது ஜோதிர்லிங்க ஆலயமாகும்.

திறப்பு விழாவில் 12,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தனது மனைவி கீதாவுடன் கலந்து கொண்டார். கோயில் கதவுகள் திறக்கப்பட்ட பிறகு, மக்களின் நல்வாழ்வு மற்றும் செழிப்புக்காக முதலில் பூஜை செய்தார். இந்த நிகழ்விற்காக கோயில் 10.8 டன் எடையுள்ள 54 வகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.
நேபாளம், தாய்லாந்து மற்றும் இலங்கை போன்ற நாடுகளிலிருந்தும் பல்வேறு வகையான மலர்கள் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டன. இந்த ஆண்டு, வாரணாசி, ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷ் போன்ற இடங்களில் செய்யப்பட்டுள்ளதைப் போல, கேதார்நாத் கோயிலிலும் ஒரு புதிய ஏற்பாடு செய்யப்படும். மந்தாகினி மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பத்ரிநாத் கோயில் நாளை திறக்கப்பட உள்ளது.