தமிழக அமைச்சரவையில் பெரும் மாற்றம் ஏற்படப் போவதாகவும், குறிப்பாக உதயநிதிக்கு ஜாக்பாட் அடிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒரு சில அமைச்சர்கள் மாற்றப்படலாம் என்றும், வட மாவட்ட திமுக எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
சட்டசபை தேர்தல் – களம் இறங்குகிறது தி.மு.க
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 39 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், 2026ல் நடக்கவுள்ள அடுத்த சட்டசபை தேர்தலுக்கு, தி.மு.க., இலக்கு நிர்ணயித்துள்ளது.இதற்கான தேர்தல் பணிகளுக்கான பணிகள், ஏற்கனவே துவங்கி விட்டதாக, அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விரைவில் கட்சி வாரியாக மாற்றம் வரவிருந்த நிலையில், ஒரே நாளில் 65 ஐ.ஏ.எஸ்.,க்கள் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் அமைச்சரவையில் சில நிர்வாக மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது அன்னிய முதலீட்டை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இம்மாதம் அமெரிக்கா செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பல்வேறு தொடர் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியுள்ளதால், முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் ஆகஸ்ட் மாத இறுதியில் செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
சுதந்திர தின கொடியேற்று விழாவில் பங்கேற்ற பிறகு வெளிநாட்டு பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
அமைச்சரவையில் கை வைத்த ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க பயணத்திற்கு முன்னதாக அரசு நிர்வாகத்தில் சில அதிரடி மாற்றங்களை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி துறை செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், உள்துறை செயலாளர்கள் உட்பட 65 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அமைச்சரவையிலும் கை வைக்க முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இதற்காக கடந்த சில வாரங்களாக ஆலோசனை நடைபெற்று வந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு அமைச்சரவை மாற்றம் உறுதி செய்யப்பட்டது.
உதயநிதிக்கு துணை முதல்வர்.?
குறிப்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என அமைச்சர்களும் திமுகவினரும் வலியுறுத்தி வரும் நிலையில் விரைவில் அமைச்சரவை மாற்றம் ஏற்பட்டு அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய அமைச்சரவை மாற்றம் நாளை அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படும் என்றும் கூறப்படுகிறது.
அமைச்சர்கள் இலாகா மாற்றம்?
அந்த வகையில் உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்படலாம் என்றும், அதன்பிறகு அவருக்கு உள்ளாட்சித் துறை வழங்கப்படலாம் என்றும் அமைச்சர் கே.என்.நேருவுக்கு போக்குவரத்து துறை வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு மின்துறையும், அதேபோன்று நிதித்துறையும் மீண்டும் அமைச்சர் பி.டி.ஆருக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் விளையாட்டுத்துறை உள்ளிட்ட சில துறைகள் வேறு அமைச்சர்களுக்கு மாற்றப்பட்டு வட மாவட்டங்களை சேர்ந்த புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும், அமைச்சரவையில் இருந்து நீக்கப்படும் பட்டியலில் மதிவேந்தன், காந்தி மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள கே.கே.எஸ்.எஸ்.ஆர் உள்ளனர். எனவே நாளை கவர்னர் மாளிகை அறிக்கை வெளியாகும் அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பை உடன்பிறப்புகள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.