சென்னை : “ஜூன்.1-ல் மதுரையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும். அமலாக்கத் துறை போன்ற அமைப்புகளை அரசியல் பழிவாங்கலுக்குப் பயன்படுத்தும் பாஜக அரசின் அதிகார அத்துமீறலை மக்கள் மன்றத்திலும் – சட்டத்தின் துணைக் கொண்டும் திமுக எதிர்கொள்ளும்” உள்ளிட்ட 4 தீர்மானங்கள் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
தேர்தல் மற்றும் கட்சிப் பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், முற்போக்கான சிந்தனைகளுடன் கடமையாற்றிய கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து ஜூன்.1-ல் மதுரையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும். அமலாக்கத் துறை போன்ற அமைப்புகளை அரசியல் பழிவாங்கலுக்குப் பயன்படுத்தும் மத்திய பாஜக அரசின் அதிகார அத்துமீறலை மக்கள் மன்றத்திலும் – சட்டத்தின் துணைக் கொண்டும் திமுக எதிர்கொள்ளும்” உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.