சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடைபெறும் வன்னியர் சங்க சித்திரை முழு நிலவு மாநாடு 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மே 11ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த மாநாட்டை முன்னிட்டு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும், கட்சியின் நிறுவனர் ராமதாஸும் இடையே இருந்த பனிப்போர் முடிவுக்கு வந்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாநாட்டுக்காக வெளியிடப்பட்ட முதல் பாடல் முழுமையாக அன்புமணி ராமதாஸை மையமாகக் கொண்டிருந்தது. இதையடுத்து எழுந்த விமர்சனங்களை சமாளிக்க, இரண்டாவது பாடலில் ராமதாஸின் போராட்ட வரலாறு மற்றும் சாதனைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. “ஐயா என்று சொல்லும் போதே ஆயிரம் கோடி மகிழ்ச்சியடா” என தொடங்கும் இந்த பாடல் அவரது அரசியல் வாழ்க்கையை கொண்டாடுகிறது. இதன் மூலம் அன்புமணி தந்தைக்கு மரியாதை செலுத்தியுள்ளார் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
மாநாட்டில் பத்து லட்சம் மக்கள் பங்கேற்க வேண்டும் என தலைமை உத்தரவிட்டுள்ள நிலையில், கட்சியின் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் முழுமையாக பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இம்மாநாட்டில் வன்னியர் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாமகவின் தலைவர் பதவி தொடர்பான மோதல் கடந்த மாதங்களில் கட்சி உள்ளேயே பரபரப்பை ஏற்படுத்தியது. ராமதாஸ் “தலைவர் நான்தான்” என அறிவித்ததோடு, அன்புமணியும் “பொதுக் குழு தேர்ந்தெடுத்த தலைவர் நான்தான்” என பதிலடி கொடுத்தார். இந்த சந்தர்ப்பத்தில் ஜிகே மணியின் நடத்தை காரணமாக, அவர் மீது கட்சியினரிடையே நம்பிக்கையற்ற நிலை உருவாகியதாக கூறப்படுகிறது.
மாநாட்டை முன்னிட்டு இப்போது கட்சி முழுவதும் ஒருமித்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது. யாராவது உள்குத்து செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தற்போதைக்கு மாநாட்டை நோக்கிய பணிகள் மட்டுமே முக்கியம் என பாமக தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த மாநாடு, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பாமக முயற்சிகளுக்கு ஒரு முக்கிய அடிப்படை கட்டுமானமாக அமையும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.